St. Antony Devotion in Tamil (Day 3)

நாள் 3 அர்ச். அந்தோனியாருடைய கல்வித் தேர்ச்சி

பெர்நாந்தோ என்பருடைய தந்தை தாய் தங்கள் குமாரன் இலௌகீக சாஸ்திரங்களைக் கற்றறிந்து தேறுவதை மாத்திரத் தேடாமல் அவர் ஞான சாஸ்திரத்தில் வர்த்திக்கவும், புண்ணிய வழியில் சிறுபிராயத்தின் பொழுதே நடக்கக் கற்றுக் கொள்ளவும் வேண்டியதற்காகத் தகுந்த வழிப்பாடுகளெல்லாந் தேடினார்கள். ஆனதுபற்றி அவருக்குப் புத்தி விவரம் வந்தபோது சந்நியாசிகள் நடத்திவந்த ஒரு பாடசாலையில் அவரை சேர்த்தார்கள். அங்கே அவர் சந்தடியான விளையாட்டுகளை நேசித்தவரல்ல, பிரயோசனமற்ற வார்த்தைகளைச் சொன்னவரல்ல. இலௌகீகக் காரியங்களைச் சட்டைப் பண்ணாது சர்வேசுரனோடு ஒன்றித்திருக்கும் ஆத்துமத்தின் அடையாளமான மௌனத்தை வெகு பிரியமாய் நேசித்தார். பிறர் விஷயத்தில் அன்பாய் நடந்துவந்தாரே தவிர பிறசிநேகத்துக்கு விரோதமான யாதொன்றுஞ் செய்தவரல்ல. தமது உபாத்தியாயர்மட்டில் வெகு வணக்க மரியாதையோடு நடந்து வந்தார்.
அந்தப் பிராயத்திலேயே அவருடைய இருதயம் தேவ சிநேகத்தினால் பற்றி எரிந்துகொண்டிருந்தது. தமது கோயில்களில் நடக்கும் சடங்குகளைப் பார்த்து ஆனந்தங் கொள்வார், சிலுவையில் அறையுண்ட சேசுநாதர் அவராத்துமத்தை முழுவதும் தமது கைவசப்படுத்தியதால் பெர்நாந்தோ என்பவர் ஒருசந்தி உபவாசத்தினாலும், இரகசியமாய் ஒறுத்தல் முயற்சிகளைச் செய்வதாலும் தாம் பிறகு தெரிந்து கொள்ளப்போகும் சந்நியாச அந்தஸ்தை அப்போதே ஆரம்பித்தார்.
அவருடைய சிறு பிராயத்தில் சன்ம சத்துராதியான சாத்தாள் அவரைத் தந்திரஞ்செய்யத் தொடங்கிற்று. ஆனதால் தமக்கிருந்த ஒய்வு நேரத்தைச் செபத்திலும் தியானத்திலும் மற்ற ஞான ‘ முயற்சிகளிலும் அர்ச்சியசிஷ்டவர் செலவழித்தார். விசேஷமாய்ப் பூசைக்கு உதவி செய்வதில் வெகு பிரியங்கொள்ளுவார். அவரைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்ப தென்னவெனில், ஒரு நாள் அவர் பீடத்தின் படிகள் ஓரமாய் முழங்கால்மேனின்று பக்தியோடு செபம் செய்துகொண்டிருந்தபோது, பசாசு மனித ரூபமாய்த் தோன்றி அவரைத் தந்திரஞ்செய்தது. தந்திரங்களைச் செயிக்கிறதுக்குப் பழகியிருந்த அவர் உடனே படிக் கல்லின்மேல் தமது விரலால் சிலுவை அடையாளம் வரையவே பசாசு ஓட்டம் பிடித்தது. அவர் கல்லின்மேல் தமது விரலால் வரைந்த சிலுவை அடையாளம் கல்லில் பதிந்த பிரகாரம் இந்நாள்வரைக்கும் அதை அந்தக் கோயிலிற் காணலாம். (1)
சே பட்டணத்தில் அர்ச். தேவமாதாவினுடைய ஒரு சுரூபத்தின் பாதத்தில் பூசைக்கு உதவி செய்கிற பிள்ளைகள் தரிக்கும் உடுப்புகள் தரித்த பிரகாரம் அர்ச், அந்தோனியாருடைய சுரூபம் ஒன்றிருக்கின்றது.(2)

இப்போது சொல்லப்பட்டவைகளைக்கொண்டு நாம் அறிய வேண்டிய தென்னவெனில் உலக கல்வி சாஸ்திரங்களையெல்லாங் கற்றறிந்து பேர்போன சாஸ்திரி என்று பேரெடுப்பதைவிட புண்ணிய மார்க்கத்தைக் கற்றறிந்து. அதன் பிரகாரம் நடப்பது மிகவும் அவசரமான காரியமல்லவோ? தம்மை அறிந்து சிநேகித்துச் சேவிக்கிறதுக்கும் அதனால் மோக்ஷத்தை அடைகிறதுக்குமல்லவோ சுவாமி நம்மெல்லாரையும் சிருஷ்டித்து இவ்வுலகத்தில் வைத்திருக்கிறார். சிறுவர்கள் இருதயத்தில் சர்வேசுரன் உண்டென்கிற விசுவாசத்தைப் பதியவைத்து, சுவிசேஷக பரிசுத்த போதனைகளைக் கற்பித்து, நீர்க் குமிழிபோலக் கடந்தொழிந்துபோகும் இச்சிவியத்தில் உலகம் பசாசு சரீரமென்னுஞ் சத்துருக்களால் உண்டாகும் தந்திரங்களை வெல்ல விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேகம் என்னும் புண்ணியங்களை ஸ்திரப்படுத்துவதில் தான் சீவியம் அடங்கியிருக்கின்றது. சாஸ்திரங்களைக் கற்றறியாமல் போனாலென்ன? இலௌகீக காரியங்களை அறியாமல் போனால்தானென்ன? அவைகளையெல்லாம் அறிந்திருப்பது நலமாயினும், பரலோக சாஸ்திரமாகிற ஆத்துமா இரக்ஷணியமடையும் வகையை அறிந்திருப்பதே அதிலும் மேன்மையும் அதியவசியமு மாயிருக்கிறதென்பதற்குச் சந்தேகமில்லை .
இது விஷயத்தில் சிறு குழந்தையாள அர்ச். அந்தோனியார் எவ்வளவோ அதிசயிக்கத்தக்க விதமாய் நடந்துகொண்டார். அவரிடத்தில் விளங்கின பரிசுத்தத் தனமும், கீழ்ப்படிதலும், தன் கடமைகளை நிறைவேற்றுகிறதில் சுறுசுறுப்பும் மற்றுமுண்டான நற்குணங்களும் எப்பேர்ப்பட்டவைகளென்று கண்டு கொள்ளக்கடவோம். சேசுநாதரைப்பற்றி, தேவ இஷ்டப்பிரசாதத்திலும் ஞானத்திலுஞ் சர்வேசுரனுக்கு முன்பாகவும், மனிதருக்கு முன்பாகவும் அதிகரித்து வந்தாரென்று சொல்லப்பட்டது போலவே அந்தோனியாரும் தேவ இஷ்டப்பிரசாதத்திலும் ஞானத்திலும் சர்வேசுரனுக்கு முன்பாகவும் மனிதருக்கு முன்பாகவும் வளர்ந்து வந்தாரென்று சொல்வதுமல்லாமல், தன் தந்தை தாய்க்கும் உபாத்தியாயருக்கும் கீழ்ப்படிந்து வந்தாரென்றும் சொல்லலாம். அவர் செய்து வந்த வண்ணமே, நீங்களும் சிறுபிராயமுள்ளவர்களே, சகல காரியங்களிலும் செய்து வருவீர்களேயாகில், அர்ச். அந்தோனியாருடைய அனுக்கிரகத்தைத் தப்பாமல் அடைவீர்கள்.

பிள்ளைகளுக்காகப் பெற்றவர்கள் சொல்லத்தகுஞ் செபம் :


மகா நேசம் பொருந்திய அர்ச். அந்தோனியாரே, சிறுவர்களின் பரிபாகலரே, என் பிள்ளைகளை உமது அடைக்கலத்தில் ஒப்புக் கொடுத்து அவர்களை உமது திரு ஆதரவில் வைக்கிறேன். அவர்கள் ஞானஸ்நானம் பெற்ற பாக்கியமான நாளில் அவர்கள் அடைந்த தேவ இஷ்டப் பிரசாதத்தை அவர்கள் இருதயங்களில் காப்பாற்றியருளும். நாளுக்கு நாள் அவர்கள் விசுவாசத்திலும் தேவ பயத்திலும் அதிகரித்து, சேசுநாதர் பார்வையிலும் தேவமாதாவினுடையவும் உம்முடையவும் அடைக்கலத்திலும் மெய்யான கிறிஸ்துவர்களாய்ச் சீவித்து, பரலோக இரச்சியத்தில் சம்மனசுகளோடு என்றென்றைக்கும் நித்திய ஆனந்த மகிமை அடையப் பாத்திரவான்களாகும்படி கிருபை செய்தருள் உம்மை மன்றாடுகிறேன். – ஆமென்.

நற்கிரியை – சிறுவர்களுக்குப் புத்திமதி சொல்லுகிறது.

மனவல்ல்ய ச் செபம் – சிறுவர்களின் பரிபாலகரான அர்ச், அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started