St. Antony Devotion (Day 1) in Tamil

அர்ச். அந்தோணியாருடைய மேலான மகிமை*

அர்ச். பிரான்சிஸ்குவின் (Fioretti) பியோரெற்றியென்னும் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதென்னவெனில், உயர்ந்த வமிசத்து வாலிபரொருவர் அர்ச். பிரான்சிஸ்கு சபை மடத்திற் பிரவேசித்து சிறிது காலஞ் சென்று சலித்துப்போய் அவதைரியமடைந்து மடத்தை விட்டுப்போக யோசித்திருக்கையில், ஒருநாள் பரவசமாகிக் கண்ட காட்சியாவது: அநேக அர்ச்சியசிஷ்டவர்கள் விலையுயர்ந்த ஆடைகளை உடுத்தி அவர்கள் முகங்களும் கரங்களும் சூரியனைப் போல ஒளி வீச இருவரிருவராக வரிசையாய் நடத்து சம்மனசுகளுடன் கலந்து உன்னதமான பொன சங்கீதங்கள் பாடி வந்தார்கள்.
அவர்களில் இருவர் மற்றெல்லோரையும்விட ஒளி வீசி அதி விலையுயர்ந்த மேன்மையான வஸ்திராபரணங்களை அணிந்திருந்தார்கள். கடைசியில் வந்தவர்கள் வாலிபரை நோக்கி: தாங்கள் எல்லோரும் (Freres Minsars) சிறு சகோதரர் என்றும், தங்களில் அதிக பிரகாசத்தோடு விளங்கின இருவரும் அர்ச், பிரான்சிஸ்குவும் (பிரான்சிஸ் ஆப் அசிசி 1181-1226) அர்ச், அந்தோனியாரும் (பதுவை அந்தோனியார் 1195-1231) என்றும் வாலிபருக்கு அறிவித்தார்கள். மெய்யாகவே சாஸ்திரியொருவர் எழுதி வைத்திருப்பது போல அர்ச். பிரான்சீஸ்கு சபைச் சந்நியாசிகள் வான்மீன்களைப் போல் ஏராளமானவர்களாயினும் அவர்களில் விசேஷமானவர் புதுமைகளைச் செய்கிறவரெனப் பேரோங்கி வளரும் அர்ச். அந்தோனியாரென்று நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

மொந்தலெம்பெர்ட்’ என்பவர் சொல்கிறதாவது: அர்ச். பிரான்சிஸ்கு உயிர் துறந்து வானமண்டலச் சேர்ந்து சேரா முன்னரே அவருக்குப் பதிலாய் சனங்களுடைய மதிப்பிலும் வணக்கத்திலும் அர்ச். அந்தோனியார் ஏற்பட்டார். அவரே அர்ச். பிரான்சிஸ்குவின் மூத்த குமாரன் என்று சகலரும் பிரசித்தப்படுத்தினார்கள். சிருஷ்டிகளின் மட்டில் தமக்கிருந்த அதிகாரத்தினால் புதுமை செய்கிறவர்’ என்ற பேர் பூண்ட அர்ச். அந்தோனியார் அவருடைய ஞானப் பிதாவாகிற அர்ச். பிரான்சிஸ்குவைப் போல விளங்கினார் என்கிறார்.

மற்றோரிடத்தில் நமது அர்ச்சியசிஷ்டவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதென்னவெனில் ‘அவருடைய தந்தையாகிய அர்ச். பிரான்சிஸ்குவை உத்தம விதமாய்க் கண்டு பாவித்தவர் அவருடன் எவ்விதம் ஒன்றித்திருக்கிறாரெனில், தன் மற்றினின்று புறப்பட்டோடும் சிற்றாறுபோல சீவியத்தின் சலங்களை எங்கும் கொண்டுபோகின்றார்” என்றெழுதப்பட்டிருக்கின்றது.

புதுமைகளின் புத்தகத்தில்’ 14-ம் நூற்றாண்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்று சொல்லப்பட்டிருக்கின்றது. என்னவென்றால், போர்த்துகால் தேசத்தில் எல்பிரோன் என்னுஞ் சிற்றூரில் வாலிபப் பெண்ணொருத்தி அர்ச். அந்தோனியார் திருநாளன்று” வேலை செய்வதற்காகப் புறப்பட்டுப் போனபோது பெருங்காற்றில் அகப்பட்டுக் கீழே விழுந்து பேச்சு மூச்சற்றிருந்தாள், அப்போது தன்னாத்தும் சரீரத்தைவிட்டுப் பிரிந்து வெகுதூரத்தில் பயங்கரத்துக்குரிய பாதாளத்தருகே கொண்டு போகப்பட்டதாகவும், அதுதான் நரகமென்று தனக்கறிவிக்கப்பட்டதாகவும் எண்ணினாள்.

பிறகு புஷ்பங்களும் பலவித கனிவர்க்க மரங்களும் அடர்ந்த பூமியிற் போக, அவ்விடத்தில் ஒளிபொருந்திய முடிகளைத் தரித்த மனிதரைக் கண்டு ஆச்சரியப்பட்டுத் தன்னைக் கூட்டிப் போனவரைக் கேட்க, அவர்: ஆத்துமாக்களுடைய தேசத்தில் இருக்கிறோம். நீ காண்கிறவர்கள் மோக்ஷவாசிகள், கடைசியில் மகா மகிமையோடு வருகிறவர் அர்ச். அந்தோணியார், மோக்ஷத்தில் ஒவ்வொரு அர்ச்சியசிஷ்டவருடையவுந் திருநாளை முறையே கொண்டாடுவதுபோல் இன்றைய தினம் அர்ச். அந்தோனியாருடைய திருநாளைக் கொண்டாடுகிறார்கள். திருச்சபையினுடையவும் அர்ச்சியசிஷ்டவர்களினுடையவுந் திருநாட்களில் வேலை செய்யாதிருந்து, பாவத்தை விலக்கி அவர்களுக்கு வணக்கஞ் செலுத்த வேண்டுமென்று உனக்குத் தெரியப்படுத்துவதற்காகவே உன்னை இவ்விடங் கொண்டு வந்தேன்” என்று சொல்லி மறைந்தார்.
அவளும் மூர்ச்சை தெளிந்து எழுந்திருந்தாள் – பரலோகமும் பூலோகமும் நமது அர்ச்சியசிஷ்டவருக்கு வணக்கஞ் செய்ய ஒன்றித்து அவருடைய வல்லப மேன்மையை நமக்குக் காண்பிக்கின்றன. அவருடைய மகிமைக்கும் மேலான பரிசுத்தத் தளத்திற்கும் நாம் காண்பிக்கக் கூடுமான முந்தின வணக்கமென்னவெளில், பாவத்தை விலக்குவதே. “என்னிடத்தில் சிநேகமில்லாவிடில் நாளொன்றுமல்லை” என்று அர்ச், சின்னப்பர் சொல்லுகிறார். தேவ இஷ்டப் பிரசாதத்தை இழந்த ஆத்துமம் அர்ச்சியசிஷ்டவர்களுடைய உதவியை அடைவது கூடாத காரியம், ஆனதால் நல்ல பாவசங்கீர்த்தனத்தால் ஆத்துமத்தைச் சுத்திகரிப்பதற்காகப் பாவிகளை மிக்க அன்போடு நேசித்தவரான அர்ச். அந்தோனியாரை மன்றாட வேண்டியது. மனஸ்தாபப்படுவதற்கும் பாவங்களை வெளிப்படுத்து வதற்கும் வேண்டிய தைரியங் கொடுப்பார். ஊதாரிப் பிள்ளையின் தந்தை தமது பிரிய தாசன் அந்தோனியாருடைய மன்றாட்டுக்கிரங்கி, ஊதாரிப் பிள்ளைக்கு மோதிரமிட்டு வெண்மையான வஸ்திரம் உடுத்தி அவனை அரண்மனையில் சேர்த்து தமது தெய்வீக விருந்துக்குப் பங்காளியாக்குவார்,

செபம்

மகாத்துமாவான அர்ச். அந்தோனியாரே, தேவ ஆசீர்வாதங்களால் அலங்கரிக்கப்பட்டு உத்தம நன்னெறியில் ஒழுகினதால் சேசுநாதருடைய பிரிய நேசரானவரே, சர்வேசுரன் உம்மிடத்திலும் உம்மைக் கொண்டுஞ் செய்தருளின அற்புதங்களுக்காக அவருக்கு நன்றியறிந்த தோத்திரஞ் செலுத்துகிறேன். நீர் எப்போதும் அற்புதங்களைச் செய்கிறவரானதால் இந்த நிர்ப்பாக்கிய சீவியத்தில் எனக்கு (நேரிடுந் தின்மைகளை நான் பொறுமையோடும் தைரியத்தோடும் சகிக்க எனக்கு அவசியமான பலனையும் வரத்தையுஞ் சேசுநாதரிடத்திலும், கன்னிமரியாம்மாளிடத்திலும் நீர் மன்றாடி அடைந்தருள உம்மைப் பிரார்த்திக்கிறேன். – ஆமென்.

நற்கிரியை – நல்ல பாவசங்கீர்த்தனஞ் செய்கிறது.

மனவல்லயச் செபம் – அர்ச். அந்தோனியாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.*

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started